சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில், தவெக தலைமை எடுத்துள்ள அதிரடி முடிவு தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. தொகுதியில் அவர்களுக்கு இருக்கும் எதிர்மறையான பிம்பமே இதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அவசர ராஜினாமாவும் கட்சித் தாவலும்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யாபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உடனடியாக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இவர்கள் நால்வரும் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.

அதிமுகவிலிருந்து இவர்கள் வெளியேறிய சமயத்தில், "இடைத்தேர்தல் வரும்போது மீண்டும் இவர்களுக்கே அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்" என்ற ஒரு ரகசிய உடன்பாட்டின் பேரிலேயே இந்த இணைப்பு நிகழ்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது.

தவெக தலைமை நடத்திய ரகசிய சர்வே

ஆனால், தற்போதைய சூழலில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக தலைமை, இந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் சீட் வழங்க சற்றும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக, தவெக மேலிடம் அந்தந்தத் தொகுதிகளில் மிகவும் ரகசியமாக நடத்திய கள ஆய்வின் (Field Survey) முடிவுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

மக்கள் தங்களுக்கு ஐந்து ஆண்டுகள் சேவை செய்ய வழங்கிய வாக்குறுதியை மதிக்காமல், சுயநல அரசியலுக்காகவும், உட்கட்சிப் பூசல்களுக்காகவும் பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்த இந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீது தொகுதி மக்கள் கடும் கோபத்தில் இருப்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் நால்வருக்கும் தற்போதைய நிலையில் அந்தந்தப் பகுதிகளில் சொந்த செல்வாக்கோ அல்லது நற்பெயரோ பெரிய அளவில் இல்லை என்பதால், இவர்களையே மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தினால் தவெகவிற்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என கட்சி மேலிடம் கணிக்கிறது. பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் கட்சி மாறுபவர்களுக்கு உடனடியாக வாய்ப்பளித்தால், அது கட்சியின் கொள்கைக்கும், பொதுமக்களிடையே உள்ள பிம்பத்திற்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்திவிடும் என்று முதல்வர் விஜய் மூத்த நிர்வாகிகளிடம் உறைக்கக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

ரிஸ்க் எடுக்க விரும்பாத தலைமை

சட்டமன்றத்தில் தவெக அரசு தனது சொந்த பலத்தை நிரூபிக்கவும், தனிப் பெரும்பான்மை என்ற இலக்கை அடையவும் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானது. எனவே, தவெக தலைமை எந்தவொரு தேவையற்ற ஆபத்தையும் (Risk) எடுக்கத் தயாராக இல்லை. இதன் காரணமாக, இந்த 4 பேருக்குப் பதிலாக அந்தந்தத் தொகுதிகளில் கட்சியின் தீவிர உழைப்பாளர்களுக்கும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் கொண்ட புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

நீதிமன்றத்தில் தொடரும் சட்டப் போராட்டம்

மறுபுறம், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மிகப்பெரிய சட்டப் போராட்டமும் வெடித்துள்ளது. இந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக சார்பில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை நிலுவையில் இருந்த சூழலில், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி அதிமுக கொறடா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் தங்களது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நீதிமன்றம் இடைக்காலத் தடை எதுவும் விதித்துவிடக் கூடாது என்பதற்காக, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயன்று வருகின்றனர்.

தவிப்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, தாய் கட்சியான அதிமுகவிலும் இடமில்லாமல், நம்பி வந்த தவெகவிலும் உரிய அங்கீகாரமும், தேர்தலுக்கான சீட்டும் கிடைக்குமா? என்ற மிகப்பெரிய அச்சத்தில் இந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், அவர்களது ஆதரவாளர்களும் தற்போது பெரும் தவிப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.

தவெகவின் இந்த திடீர் அரசியல் நகர்வும், கண்டிப்பும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி, மற்ற கட்சிகளில் இருந்து தவெகவுக்கு தாவத் தயாராக இருந்த பிற அதிருப்தி தலைவர்கள் மத்தியிலும் ஒருவித தயக்கத்தை உருவாக்கியுள்ளது.