அனிதா ராதாகிருஷ்ணன் கைது பின்னணி:
தமிழக வெற்றிக் கழகத்தில் சேர மறுப்பு தெரிவித்ததால் தான் தம்மைக் காவல்துறை கைது செய்துள்ளதாக பரபரப்பு புகார் எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த 20-ஆம் தேதியன்று திருச்செந்தூர் பகுதியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். அந்த உரையின் போது, தவெக தலைவர் விஜய் குறித்து அவர் அவமதிக்கும் வகையிலும், ஒருமையில் விமர்சித்தும் பேசியதாக சர்ச்சைகள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து, தவெக-வின் நகரப் பொறுப்பாளர் செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல் நிலையத்தினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், அவரது முன்ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவு வெளிவந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அனிதா ராதாகிருஷ்ணனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய் பணிகளை மேற்கொள்வதற்காக அனிதா ராதாகிருஷ்ணன் வந்திருந்த சமயத்தில், ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் ரெனிஸ் வழிகாட்டுதலின்படி வந்த போலீசார் அவரை அந்த இடத்திலேயே வைத்துக் கைது செய்தனர்.
அப்போது, தனது சொந்தக் காரில் வருவதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் அனுமதி கேட்டபோதிலும், அதனை நிராகரித்த காவல்துறையினர் அவரைத் தங்களது அதிகாரப்பூர்வ வாகனத்திலேயே ஏற்றி அழைத்துச் சென்றனர். இதையடுத்து, அவரை நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காகப் போலீசார் கொண்டு சென்றனர். அந்தப் பயணத்தின் போது ஊடகவியலாளர்களைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், “என்னை தவெக கட்சியில் சேருமாறும், எனது எம்.எல்.ஏ பதவியைத் துறக்குமாறும் வற்புறுத்தினார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. நான் என்றும் திமுக-விலேயே தொடர்வேன். இந்த முடிவின் காரணமாகவே பழிவாங்கும் நோக்கில் நான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளேன்” என்று அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.