மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி தனது மஞ்சள் சால்வையை தொடர்ந்து அணியத் தொடங்கியதற்குப் பின்னால் மருத்துவ காரணம் இருந்ததாக அவர் 1997ஆம் ஆண்டு எழுதிய கடிதம் ஒன்றில் விளக்கியுள்ளார். அந்த கடிதத்தில் தனது உடல்நலப் பிரச்னை, மருத்துவர்கள் வழங்கிய அறிவுரை மற்றும் பின்னர் மஞ்சள் சால்வை தனது தனி அடையாளமாக மாறிய விதம் குறித்து அவர் விரிவாக பதிவு செய்துள்ளார்.

1997ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி “உடன்பிறப்பே” எனத் தொடங்கி எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வலது கன்னத்தில் திடீரென மாம்பிஞ்சு அளவுக்கு வீக்கம் ஏற்பட்டதாக கலைஞர் தெரிவித்துள்ளார். அந்த வீக்கம் படிப்படியாக அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி மற்றும் டாக்டர் கோபால் ஆகியோர் அவரை சென்னையில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டதாகக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் முடிவில், வலது கன்னத்தில் உமிழ்நீர் சுரப்பியுடன் இணைந்திருந்த மெல்லிய குழாயில் சிறிய அளவில் வெடிப்பு ஏற்பட்டிருந்ததும், அதன் காரணமாக உமிழ்நீர் தேக்கம் ஏற்பட்டு வீக்கம் உருவானதும் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதலில் மருத்துவர்கள் முடிவு செய்தனர். வலது புறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை இணைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இறுதியில் அறுவை சிகிச்சை தேவையில்லை என முடிவு செய்யப்பட்டு, சில நாட்களுக்கு மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் வீக்கமும் படிப்படியாகக் குறைந்ததாகவும் கலைஞர் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் சால்வை எப்படி வந்தது?

இந்த உடல்நலப் பிரச்னையின் போது, கழுத்து மற்றும் முகம் உள்ளிட்ட தோள் பகுதி எப்போதும் வெப்பமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதற்காக வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாக கம்பளிச் சால்வையை கழுத்தைச் சுற்றி அணிவது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று அப்போது தான் உடனடியாக அணிந்துகொண்டது மஞ்சள் நிற சால்வை என கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் மஞ்சள் சால்வையை அணிந்திருந்ததைப் பார்த்த குடும்பத்தினரும் நண்பர்களும், “இது நன்றாக இருக்கிறது; இதையே உங்களுடைய தனி அடையாளமாக தொடர்ந்து அணியுங்கள்” என்று அன்புடன் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் மஞ்சள் சால்வை தனது தனி அடையாளமாக மாறியதாக கலைஞர் எழுதியுள்ளார். சிலர் தாடி வைத்தும், சிலர் தொப்பி அணிந்தும், சிலர் கையில் பிரம்பு வைத்தும் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதைப் போல, தனக்கும் மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டும் என நினைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“தெய்வீக காரணம் அல்ல; மருத்துவ அறிவுரையே காரணம்”

காலப்போக்கில் கலைஞர் கருணாநிதியின் மஞ்சள் சால்வை குறித்து பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், அந்த சால்வையின் பின்னணியை அவருடைய 1997ஆம் ஆண்டு கடிதம் தெளிவுபடுத்துகிறது.

மஞ்சள் சால்வையை அணியத் தொடங்கியதற்கு பின்னால் எந்தவிதமான தெய்வீக காரணமும் இல்லை என்றும், அது மருத்துவர்களின் அறிவுரையைத் தொடர்ந்து தொடங்கிய பழக்கம் என்றும் இந்தக் கடிதத்தின் மூலம் தெரியவருகிறது.
மேலும், மஞ்சள் சால்வை குறித்து சிலர் கேலி, கிண்டல் செய்தாலும் அதனால் தனக்கு கோபம் ஏற்படவில்லை என்றும், மாறாக சிரிப்பே வருவதாகவும் கலைஞர் கருணாநிதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1997ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கடிதம், கலைஞர் கருணாநிதியின் அரசியல் அடையாளமாக மாறிய மஞ்சள் சால்வைக்கு பின்னால் இருந்த ஒரு முக்கியமான மருத்துவப் பின்னணியை பதிவு செய்துள்ள வரலாற்றுச் சான்றாக தற்போது கவனம் பெறுகிறது.